வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
இச்சாலையில் குஜிலியம்பாறை தாலுகா எரியோடு அருகே உள்ள நாகையைகோட்டை ஊராட்சி புதுரோடு என்ற ஊரில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்துக்கு நெடுஞ்சலாக சாலை விரிவாக்கப் பணி செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் 8 வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதனையடுத்து தனிநபர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வேடசந்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் தலைமையில் உதவி பொறியாளர் மாதுரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு 8 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.



