திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில் உள்ள இலுப்பூர் கிராமத்தில் ஜாக்குலின்ரோஸ் என்பவர் வீடுகட்டிவருகிறார். ஜாக்குலின்ரோஸ் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இவர், தான் கட்டிவரும் புதிய வீட்டில் வெல்டிங் வேலைக்காக சோழவேந்தனை அணுகியுள்ளார். இதன் மூலம் அறிமுகமான சோழவேந்தனிடம் ஜாக்குலின்ரோஸ் தனது வீட்டின் கட்டுமானப் பணிக்காக பணம் கேட்டுள்ளார்.
மேலும் தான் வங்கி ஒன்றில் லோன் கேட்டுள்ளதாகவும் அதுவந்தவுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் சோழவேந்தன் முதல் தவணையாக கடந்த 28.12.23 அன்று ஆசிரியர் ஜாக்குலின்ரோஸின் வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் போட்டுள்ளார். மேலும் சோழவேந்தனின் குடும்ப சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் ஜாக்குலினரோஸ் தன்னிடம் கொடுக்கும் பணத்தை கம்பெனிகளில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல தேதிகளில் நேரடியாகவும், வங்கிக் கணக்கு மூலமாகவும் ரூ.40,60,000 பெற்றுள்ளார்.
இதுதவிர ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் போர்ச்சுக்கல் நாட்டில் தன் உறவினர்கள், தெரிந்த நண்பர்கள் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, சோழவேந்தனிடம் ஆட்களை அழைத்துவரக் கூறியுள்ளார். அதன்பேரில் சோழவேந்தன் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் ஒரு இலட்சம் இரண்டரை லட்சம் என 14 பேர்களிடம் பெற்ற மொத்த தொகையாக ரூ.31 லட்சம் வாங்கி ஆசிரியர் ஜாக்குலின்ரோஸின் வங்கிக் கணக்கிலும், அவரிடம் நேரடியாகவும் கொடுத்துள்ளார்.
ஆனால் ஜாக்குலின்ரோஸ் பணத்தையும் திருப்பி கொடுக்காமல், வெளிநாட்டு வேலையும் வாங்கித்தராமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சோழவேந்தனை ஏமாற்றியுள்ளார். எனவே ஜாக்குலின் ரோ ஸ் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த சோழவேந்தன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எனவே சோழவேந்தன் காவல்துறை டிஐஜி அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை.
இத்தகைய சூழலில் சோழவேந்தன் தான் ஏமாற்றப்பட்டதையும், தன்னிடம் வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிதரமுடியாததற்கு காரணம் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் எனவும், இதுகுறித்து ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் மோசடி நபருக்கு ஆதரவாக காவல்துறை இருப்பதாகவும், தன்னை மன்னித்துவிடுங்கள் எனவும் தனது குடும்பத்தாரிடமும், பணம் கொடுத்த நண்பர்களிடம் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது கையில் இருந்த எலிபேஸ்ட் மருந்தை தண்ணீரில் ஊற்றி கலக்கிக் குடித்து அதையும் செல்போனில் பதிவு செய்து மயங்கி விழுத்தார்.
அவருடைய மனைவி ரூபாதன் கணவன் ஆபத்தான நிலையினை அறிந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் சோழவேந்தனின் செல்போனை அவரது மகன் பார்த்தபோது தனது தந்தை எலிபேஸ்ட் மருந்தை சாப்பிட்ட காட்சியும், தனது நிலையை எடுத்துரைத்து பேசிய காட்சியும் சோழவேந்தனே தானாக தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது தெரியவந்தது. இத்தகைய வீடியோ காட்சி தற்போது வெளியாகிபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



