செஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும் காட்சியைநடுகல்லாவோ அல்லது புடைப்புச் சிற்பமாகவோ உருவாக்கும் வகையில் பாறையில் அதற்கான முதற்கட்ட பணியாக அவ்வுருவங்கள் உளிகொண்டு வரையப்பட்டுள்ள காட்சியை செஞ்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியரும் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வுநடுவத்தின் தலைவருமான எ.சுதாகர் தமிழ்த்துறை மாணவர்கள் முகில், பச்சயப்பன் ஆகியோர்கள ஆய்வின்போது கண்டனர். இப்பாறை கோட்டு வரைபடம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வத்தின் துணைச்செயலாளரும் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியருமான சு.பிரேம்குமார் கூறியதாவது:
பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு.
புலியோடு சண்டையிடும் பாறைச் சிற்பத்தின் கோட்டோவியம் இப்பகுதியில் கிடைத்திருப்பதைக் காணுகையில் ஹோய்சாளர்கள் திருவண்ணாமலையை ஆண்ட பொழுது அவர்களுடைய அரசாட்சி செஞ்சி பகுதிவரை பரவியிருந்ததற்கான சான்றாக இவ்வரசச் சின்னம் அமைந்துள்ளது. என்பதை அறிய முடிகிறது. இதனை பாதுக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் வேண்டு கோள் விடுத்தார்.



