தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி விரதம் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் 60 பேருடன் தஞ்சாவூரில் இருந்து பழனிக்கு புறப்பட்டனர்.
தஞ்சையில் இருந்து பழனிக்கு இவர்கள், 215 கிலோ மீட்டர் தூரம் 3 சக்கர சைக்கிளை கைகளால் சுழற்றியபடி பயணிக்கின்றனர். இந்த பயணத்தின்போது கையில் வலி ஏற்பட்டால் உடன் செல்லும் சக பக்தர்கள் சைக்கிளை பிடித்து தள்ளியபடி அழைத்துச் செல்கிறார்கள். ஆங்காங்கே தங்கி சமையல் செய்து சாப்பிடும்போது குளிக்கவும், சாப்பிடுவதற்கும் உடன் வரும் பக்தர்கள் இவர்களை தங்களது இரு கைகளால் தூக்கிச்சென்று உட்காரும் இடத்தில் அமர வைக்கிறார்கள்.
இவர்கள் பழனி செல்லும் வழியில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, வேடசந்தூரை கடந்து சென்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள், பழனி கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய உள்ளனர். இதில் மாரிச்சாமி கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் வந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



