திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் தலைமை தாங்கினார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வரவேற்று பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தொகுதி பொறுப்பாளர் அரசு, நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனுவாசன், ஞானவேல், திராவிட முருகன், சி.கே.ரவிக்குமார், தினகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜ், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார். இனி அவரது பேச்சு தமிழக மக்களிடம் எடுபடாது.
மேலும், அவரது கூட்டணியில் இணைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்தே தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. அதேசமயம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் தெளிவாக தெரியும் என அவர் தெரிவித்தார்.



