திண்டுக்கல் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த காரைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்துச் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகிகள் கூட்டம்
நேற்று கரூரில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 24) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நேற்று இரவு கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி காரில் புறப்பட்டார்.

அதிரடி சோதனை
கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, வேடசந்தூர் அடுத்துள்ள கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் காரை நிறுத்தினர். வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (DSP) பவித்ரா தலைமையிலான அதிகாரிகள், துணை முதலமைச்சரின் காரில் அதிரடியாகச் சோதனையை மேற்கொண்டனர்.
திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு
துணை முதலமைச்சரின் கார் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட தகவல் பரவியதும், வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.
சோதனைக்குப் பிறகு துணை முதலமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் காரிலேயே அதிகாரிகள் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.



