செங்குன்றம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 17). வெல்டிங் வேலை செய்துவந்த பாபு குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புவாடகை வீட்டிற்கு குடி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பாபுவின் பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தநிலையில் பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
பாபுவின் சகோதரர் செல்வகுமார் தொலைபேசியில் அழைத்தபோதும் பாபு அதற்கு பதில் அளிக்காததால் தனது நண்பரை அனுப்பி பார்க்க சொல்லி உள்ளார். வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது 17 வயது சிறுவனான பாபு கை, கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலின் பேரில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். நேற்று முன்தினம் செங்குன்றம் அடுத்த காந்தி நகர் போலீஸ் பூத் அருகே சோழவரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் முன்னுக்கு பின்கூறியதன் அடிப்படையில் பிடித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்ததில் பழி தீர்ப்பதற்காக பாபுவை அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் அடிபாதம் பகுதியைச் சேர்ந்த அஜித் (26), கௌதம் (22), பழனி பாரதி (28) புழல் காவாங்கரை மகாவீர கார்டன் முதல் தெருவை சேர்ந்த பூவரசன் (26) எனவும் தெரிய வந்தது.
4 பேரையும் கைது செய்து சோழவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நண்பர்களிடையே ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அஜித்துக்கும் பாபுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்போது பாபு ஆத்திரம் அடைந்து அஜித்தை தாக்கியதும் தெரியவந்தது. இதில் படுகாயம் அடைந்த அஜித் தன் நண்பர்களான கௌதம், பழனி பாரதி, பூவரசன் ஆகியோருடன் சேர்ந்து பாபுவின் வீட்டுக்கு சென்று பாபு கை கால்கள் கட்டி கழுத்தை அறுத்துக் கொலை செய்து தப்பி வந்ததாக ஒப்புக்கொண்டனர்.
4 பேரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்



