தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை பணம் வழங்கி கவரும் செயல்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மெரினா காமராஜர் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பறக்கும் படை பொறுப்பாளர் உதவி செயற்பொறியாளர் திலக் தலைமையில் நேற்று மாலை வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.29 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், கட்டுமான பணிக்காக அந்த பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்ததும் தெரியவந்தது.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.1.16 லட்சமும், எழும்பூர் தொகுதியில் ரூ.55 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



