துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 242 பயணிகளுடன் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை வந்தது. பின்னர், அதே விமானம் அதிகாலை 4 மணிக்கு 206 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. விமானம் குஜராத் கடல் எல்லைப் பகுதியில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துபாய் விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விமானி சென்னை மற்றும் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னை திருப்பி தரையிறக்கினார். காலை 8.20 மணியளவில் அந்த விமானம் பாதுகாப்பாக சென்னை வந்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், காலை 9.50 மணிக்கு 258 பயணிகளுடன் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானமும், காலை 10.30 மணிக்கு 186 பயணிகளுடன் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானமும் ரத்து செய்யப்பட்டன.
இதன் விளைவாக, துபாய் செல்ல இருந்த 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். துபாயில் நிலைமை சீராகி, வான்வழி மீண்டும் திறக்கப்பட்டதும் விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



