திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொலைபேசியில் செய்தி அனுப்புவதாகவும், சமூக வலைதளங்களில் ஆபாசமாக செய்தி வெளியிடுவதாகவும் பாய்ச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அவர்கள் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி விடுவதாக கூறி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரின் கண்ணெதிரிலேயே லட்சுமி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளிக்க முயன்றார்.
இதையடுத்து அருகில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அப்பெண்ணெய் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு காவல் துறையினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதால் இது போன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே போல் தம்பதி ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் கடந்த வாரம் தம்பதி இருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருவது மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



