சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டிற்கு குடி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாபுவின் பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த நிலையில் பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு முதல் பாபுவின் சகோதரர் தொலைபேசியில் அழைத்தபோது அதற்கு பதில் அளிக்காததால் நேற்று தனது நண்பரை அனுப்பி பார்க்க சொல்லி உள்ளார். வீடு பூட்டி இருந்ததால் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது 17 வயது சிறுவனான பாபு கை, கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சோழவரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நண்பர்களிடையே கஞ்சா போதையில் கொலை சம்பவம் அரங்கேறியதா, கள்ளக்காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் அரங்கேறியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுவன் கை கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



