மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஹரிவன்ஷ் அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அவையின் கண்ணியத்தை நிலைநாட்டுவதிலும், நாட்டின் இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும் ஹரிவன்ஷ் அவர்களின் பங்களிப்பு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அனுபவத்திற்கும் தகுதிக்கும் கிடைத்த அங்கீகாரம்
ஹரிவன்ஷ் மூன்றாவது முறையாகத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அவர் மீது இந்த அவை கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் சான்றாகும். கடந்த காலங்களில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான பணிமுறைக்கும், முதிர்ந்த அனுபவத்திற்கும் இந்த அவை தகுந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வெறும் முறைப்படி அவையை நடத்தாமல், தனது இதழியல் மற்றும் பொது வாழ்வின் அனுபவங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி அவையின் செயல்பாடுகளை அவர் செழுமைப்படுத்தி வருகிறார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகருடன் அமைந்த அரிய ஒற்றுமை
துணைத் தலைவராகப் பொறுப்பேற்கும் இந்நாள் (ஏப்ரல் 17), முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளோடு ஒத்துப்போவது ஒரு மிகச்சிறந்த தற்செயல் ஒற்றுமையாகும். சந்திரசேகர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஹரிவன்ஷ், அவரது விரிவான வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதி புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். எனவே, இந்தத் நன்னாள் அவருக்கு மேலும் சிறப்பான ஒன் றாகும்.
இதழியல் துறையின் உயர் விழுமியங்கள்
இதழியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ஹரிவன்ஷ், எப்போதும் உயர் விழுமியங்களையே தனது அடித்தளமாகக் கொண்டிருந்தார். அவரது எழுத்தில் கூர்மையும், பேச்சிலும் நடத்தையிலும் மென்மையும் பணிவும் நிறைந்திருக்கும். சமூகத்தின் அடித்தட்டு மனிதனையும் சென்றடையும் நோக்கில் அவர் ஆற்றிய இதழியல் பணிகள், இன்று அவையின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கின்றன. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடமிருந்து நேர மேலாண்மை மற்றும் கடமை உணர்வைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இளைஞர்களுடனான பிணைப்பு மற்றும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’
2018-ம் ஆண்டு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், ஊடக வெளிச்சத்தை விரும்பாமல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 350-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஹரிவன்ஷ் நடத்தியுள்ளார். ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற கனவை நோக்கி இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைக்கும் கல்விப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
அவரது முதல் அமெரிக்கப் பயணத்தின் போது கூட, அங்குள்ள கல்வி முறை மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைப் படித்துப் புரிந்துகொள்வதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட்டார். இந்தியப் பல்கலைக்கழகங்களும் உலகத் தரத்திற்கு உயர வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் எப்போதும் உள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாகப் பயன்படுத்திய முன்மாதிரி
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை (MPLAD) கல்வி மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்காக எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணத்தை விடுத்துள்ளார். அவரது நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட சில முக்கிய மையங்கள்:
- ஐ.ஐ.டி பாட்னா: மறைந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வு மையம்.
- நிலநடுக்க பொறியியல் மையம்: பீகார் பகுதியின் நிலநடுக்க பாதிப்புகளை ஆராயும் மையம்.
- ஆற்று ஆய்வு மையம் (பாட்னா பல்கலைக்கழகம்): கங்கை மற்றும் காக்ரா ஆறுகளின் நீர் அரிப்பு குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வு மையம்.
- செயற்கை நுண்ணறிவு மையம்: மகத் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மையம்.
புதிய நாடாளுமன்றக் கட்டுமானத்தில் உற்ற துணை
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிலையிலும் உற்ற துணையாக நின்று ஹரிவன்ஷ் செயல்பட்டார். அவையின் அடையாளம், கலைக்கூடம் அமைத்தல், மற்றும் பல்வேறு வாயில்களுக்குப் பெயர் சூட்டுவது வரை அவரது பங்களிப்பு அபரிமிதமானது என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
‘ஹரி கிருபை’ என்றும் நிலைத்திருக்கட்டும்
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் மாநிலங்களவையின் பொறுப்பு இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த இரண்டாம் கால் பகுதியில் மிகவும் மகத்தானது. அவையைத் திறம்பட நடத்த அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இறுதியாக, “எல்லாம் ‘ஹரி கிருபை’ (இறைவனின் அருள்) பொறுத்தே அமையும். அவையில் அமர்ந்திருப்பவர்களிலும் அந்த ‘ஹரி’ (ஹரிவன்ஷ்) இருக்கிறார்; இறைவனின் அருளும் என்றும் நிலைத்திருக்கட்டும்” என்று வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.



