செய்யாறு அடுத்த சிப்காட் மாங்கால் கூட்ரோடு சந்திப்பு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இந்த ஏடிஎம்மில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடப்பாரையால் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றனர்.
முயற்சி தோல்வி அடைந்ததால் சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர்கள் வெளியேறி விட்டனர். ஆனால், மர்ம நபர்கள் உள்ளே புகுந்த நேரத்தில் ஏ.டி.எம். கண்காணிப்பு கேமரா பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால், மர்ம நபர்களுக்கு இது சாதகமாகி விட்டது. மறுநாள் ஏ.டி.எம்., உடைக்கப்பட்டிருந்த தகவலை, பொது மக்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கும் தூசி காவல் நிலையத்திற்கும் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 10 நாட்கள் கழித்து இந்த ஏடிஎம்மில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்டறிந்தனர்.
இவர்கள் மாங்கால் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது. உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த .சிவம் ( 28 ), ராஜ் புட் ( 30 ) ஆகியோர் அவர்கள் என கண்டறிந்தனர். போலீசார் அவர்களை நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தையும், கட்டப்பாரை உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.



