”பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பாட்டிலிங் நிலையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் பயன்பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள், இந்த பணியை செய்கின்றனர்.
நடப்பாண்டு முதல் 2030ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதில் இருக்கும் ஒரு சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களது ஆட்சேபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் டேங்கர் லாரிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல்லில் டேங்கர் லாரி சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:
2025 – 2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.
மார்ச் 24 ம் தேதி தகவல் கூறப்படும் என கூறிய எண்ணெய் நிறுவனங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர்கள் வெளியிட்டது பாதகமான அறிவிப்பு மட்டுமே. நாங்கள் நஷ்டத்திற்காக லாரி இயக்க முடியாது. 10 இடங்களில் கேஸ் ஏற்றும் இடங்கள் உள்ளன. நாளை முதல் அந்த இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும்.
நாளை முதல் காலமுறை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்படும். 4 ஆயிரம் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயங்காது. இந்தியா முழுவதும் பாதிப்புத் தான். மற்ற மண்டலத்திலும் பேசி வருகின்றோம். அவர்களும் போராடத் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
டேங்கர் லாரிகள் போராட்டம் நடக்கும் பட்சத்தில் சிலிண்டர் பாட்டிலிங் நிலையங்களுக்கு கேஸ் கொண்டு செல்வது பாதிக்கும்; இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.