தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மன்னேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரி (60) இவரது மனைவி முத்தம்மாள் (55) இவர்கள் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இவர் வளர்த்து வரும் கறவை மாடு ஒன்று 8 மாத சினையாக இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. திடிரென நேற்று உணவு எடுத்துக் கொள்ளாமல் சோர்வாக காணப்பட்டது. இதனால் அருகில் மாக்கனூரில் உள்ள கால்நடை மருத்துவர் என கூறிய தமிழ்ச்செல்வன் (25) என்பவரை அழைத்து காட்டியுள்ளனர்.
கறவை மாட்டை பரிசோதித்த தமிழ்ச்செல்வன் மாட்டிற்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக குளுக்கோஸ் மற்றும் ஊசி போட வேண்டும் எனவும் கூறி உள்ளார். தொடர்ந்து மாட்டிற்கு குளுக்கோஸ் மற்றும் ஊசிகளை செலுத்தினார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் கறவை மாடு பிட்ஸ் வந்தது போல் கால்களை உதைத்து கொண்டு மயக்கமானது.
இதனை கண்ட தமிழ்ச்செல்வன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். செய்வதறியாது திகைத்த மூதாட்டி கதறி அழுத நிலையில் அருகில் உள்ள பாப்பாரப்பட்டி கால்நடை மருத்துவரை அழைத்து காட்டினார், பரிசோதனை செய்து பார்த்ததில் சுறவை மாடு உயிரிழந்தது தெரிய வந்தது. மருத்துவர்கள் விசாரித்ததில் தமிழ்ச்செல்வன் போலி மருத்துவர் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூதாட்டி கண்ணீருடன் போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களுடன் சென்று பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தருமபுரி கால்நடை மருத்துவர் சங்க மாவட்டதலைவர் மருத்துவர் திருமுருகன் கூறும்போது தருமபுரி மாவட்டத்தில் சினை ஊசி போடுவதாக கூறி போலீ டாக்டர்கள் பெருகிவிட்டதாகவும், இதனால் படிப்பறிவில்லாத பாமர ஏழை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் தவறான சிகிச்சைகள் செய்வதன் மூலம் கால்நடை இறப்பு அதிகமாகி வருவதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாகவும், இதே போன்று தமிழகம் முழுவதும் ஏராளமான போலி டாக்டர்கள் நடமாடுவ தாகவும்,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து போலி டாக்டர்களை களைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



