கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல், தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீரழிவின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாகும். சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வேலாயுதம் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞரான வேலாயுதம் போன்ற மண்ணுரிமைப் போராளிகளை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு நில ஆக்கிரமிப்பு, ஊழல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை கவலைக்குரியது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலாயுதம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பிற்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



