அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், யூடியூபரும் சினிமா விமர்சகருமான பிஸ்மி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், மேலும் தமிழன் கோகுல் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு சீமான் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கௌரி விசாரித்தார். விசாரணையின்போது, தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது என்றும், சீமான் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக ஒரு திமுக எம்எல்ஏ மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படும் நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, “அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது” என்று எச்சரித்த நீதிபதி, மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் சீமான் தொடர்பான மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் விசாரணையை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



