மாணவர்களின் போராட்டத்தை அரசு உண்மையாக மதிப்பதாகவும், ஆனால் சிலர் அந்தப் போராட்டத்தை முதலமைச்சருக்கு எதிராக திசைதிருப்ப முயற்சிப்பதாகவும், அத்தகைய முயற்சிகளை அரசு உரிய முறையில் கையாளும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே நிரந்தரத் தீர்வு என முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக கூறினார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு நியாயமான ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் சிலர் அதனை அரசியல் நோக்கில் முதலமைச்சருக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அத்தகைய செயல்களை அரசு சட்டப்படி கையாளும் என்றார். நீட் எதிர்ப்பு மசோதா குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
பழநி கோயில் நில மோசடி தொடர்பாக பேசிய அமைச்சர், இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். அரசியல் நோக்கில் தனது பெயர் இவ்வழக்கில் இழுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தானே முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
பழநியில் சம்பந்தப்பட்ட நிலம் குறித்து இந்த விவகாரம் எழுந்த பிறகே தனக்குத் தெரியவந்ததாகவும், தனது உறவினர்களுடன் தொடர்புபடுத்தி அரசியல் செய்வதை விட மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியமாக பணியாற்றிய பழனிவேல் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.



