இன்று முதல் ‘கத்திரி’ வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் நாளை முதல் மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பு மக்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.
பொதுவாகவே தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும். கூடவே கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகும்.அதனால கத்திரி வெயில் எப்போது முடியும் என்று மக்கள் தவியாய் தவித்து நிற்பார்கள்.
ஆனால் அந்த நிலையை மாற்றும்விதமாக தமிழகத்தில் மே 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. 2 நாட்களுக்கு முன்னதாக கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை நிலவரம் மாறி மிதமான மழை பதிவானது.
இந் நிலையில் வரும் 5ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.
மேலும், மே 6ம் தேதி ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மழை அறிவிப்பால் நாளை முதல் நிலவும் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணத்தில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று முதல் அக்னி தொடங்குகிறது. ஆனால் இந்த அக்னி வெயில் தொடங்கும் அடுத்த நாளே (5ம் தேதி) மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளனர்.