தமிழ்நாடு அரசின் புதிய சூப்பர் ‘ஹிட்’ மசோதா நிச்சயம் தேர்தல் களத்தில் பெரிய அளவில் ஓட்டு வங்கியை அள்ளித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தலைப்பினை பார்த்ததும் தமிழ்நாடு அரசு ஓட்டு வங்கியை மனதில் வைத்து அரசு நிர்வாகத்தை நடத்துகிறது என நினைக்க வேண்டாம். தவறாகவும் புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களால், தி.மு.க., அரசிற்கு ஓட்டு வங்கி அதிகரிக்கிறது. இது தான் உண்மை.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் அறிந்த திட்டங்கள்
முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அவரது தந்தை கருணாநிதியை போன்றே, ஏழைகள், அடித்தளத்தில் வசிக்கும் அப்பாவி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தனது நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.
இதனால் தான், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். இந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பு, அந்த பணத்திற்காக ஏங்கிக் காத்திருக்கும் ஏழை மக்களுக்குத் தான் புரியும். இப்போது தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் நடத்தும் தலைவர்களிடமும் பல ஆயிரம் கோடிகள் புரள்வதால், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது ஒரிரு நிமிட டீ செலவு அவ்வளவு தான்.
ஆனால் இந்த பணத்தை வாங்க, வங்கிகள் முன்பும், வங்கிகள் அமைத்துள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தின் முன்பும் அமர்ந்திருக்கும் பெண்களை கவனித்துப் பார்த்தால் மட்டுமே, அவர்களுக்கு இந்த பணம் எந்த அளவு வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக இருக்கிறது என்பது தெரியும்.
ஐஏஎஸ்களை உருவாக்கிய ‘நான் முதல்வன்’
அதேபோல் கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் பல லட்சம் பேர் உயர்கல்வி படிக்க பெரிய அளவில் உதவியாக உள்ளது. தமிழ்நாடு அரசு நடத்தி வரும் கல்வி மையத்தில் படித்தவர்களில் 50 பேர் இன்று ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை பார்த்தாலே, தமிழக அரசு திட்டங்களின் மகிமை பற்றி தெரியும்.
வடமாநிலங்களில் படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்ன தலைவர்கள் எல்லாமே இப்போது தமிழக அரசின் இலவச கல்வி மையத்தில் படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்துள்ள மாணவ, மாணவிகளைப் பார்த்து வியந்து போய் உள்ளனர். கார்ப்பரேட்களுக்காக கட்சி நடத்தும் பலருக்கும், எந்த நேரமும் ஏ.சி., வளையத்திற்குள்ளும், சாப்பிடக்கூட சொந்த பாதுகாப்பு பணியாளர்கள் புடைசூழ வந்து போஸ் தரும், டிஜிட்டல் உலகில் வசிக்கும் ‘‘புதிய’’ தலைவர்களுக்கும் இந்த விஷயத்தின் அடிநாதம் புரியவே பல வருடங்கள் வரை ஆகும்.
அடுத்து மகளிருக்கான இலவச பஸ் பயணம். இதனை மகளிர் உரிமைத்தொகை என்றும், மகளிர் உரிமை பயணம் என்றும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிக, மிக மரியாதை நிறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி உச்சரித்து வருகிறார். ஆனால் தன் கட்சி மற்றும் தான் அங்கம் வகிக்கும் ஆட்சியின் தலைவரின் மனம் பற்றி அறியாத விஷமத்தனமான சில எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் ‘ஆயிரம் ரூபாய் வந்திருச்சா, பௌடர் போட்டு ஜம்முனு வந்திருக்கீங்க’, ‘ஓசியில தான பஸ்ல போற’ என்று பேசி, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி மக்களையும் அசிங்கப்படுத்துகின்றனர்.
முதலமைச்சர் அடித்த சிக்ஸர்
இவர்களை புறக்கணித்து விட்டுப் பார்த்தால், ஸ்டாலின் கொண்டு வந்துள்ள இந்த திட்டங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ‘ஹிட்’ திட்டங்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்படி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வரும் நலத்திட்டங்களை அடுக்கலாம்.
இப்போது அவர் அடித்துள்ள சிக்ஸர், நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு ‘ஹிட்’டான விஷயமாக மாறி உள்ளது. இந்தியாவில் வாழும் 145 கோடிப்பேருக்கு மட்டுமல்ல… உலகில் வாழும் 850 கோடிப்பேருக்கும் பணத்தின் தேவை உள்ளது. 14 லட்சம் கோடி சொத்து வைத்துள்ள முகேஷ்அம்பானி எனக்கு இந்த பணம் போதும் என்று ஓய்வெடுக்க கிளம்பி விட்டாரா, என்ன? இல்லை. தனது சொத்து மதிப்பினை 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த உழைத்துக் கொண்டிருக்கிறார்.
உலகின் பெரும் பணக்காரர் எலான்மஸ்க், உலகின் அதிகாரம் மிக்க அமெரிக்க அரசின் செயல்அலுவலர் பதவியில் இருப்பதால், தன் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே எனக்கு பதவி வேண்டாம். நான் இன்னும் ஒரு மாதத்தில் விலகி என் தொழிலை கவனிக்கச் சென்று விடுவேன் என்கிறார். இதுவே போதும், பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது என்பது எல்லோருக்கும் புரியும்.
பெண்களை பாதுகாக்கும் மசோதா
தொழில்களில் பல வகை இருப்பது போல், பணத்தைக் கொடுத்து பணம் வாங்குவதும் ஒரு பெரும் தொழிலாக மாறி உள்ளது. இன்னும் கிராமப்புறங்களில் கந்துவட்டி, ஏலச்சீட்டு, குழுசீட்டு, என சிறிய அளவில் தொடங்கிய பணப்பிரச்னைகள், கூட்டு வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என உயர்ந்து விட்டது. பல்வேறு அவசிய தேவைகளுக்காக வேறு வழியின்றி, இதில் சிக்கிய மக்கள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும்.
கிராமத்து சிறிய ரவுடிகள் நடத்தி வரும் இந்த பணவட்டி வணிகத்தில், இப்போது, உலகின் மிகப்பெரிய பண மாபியாக்களிடம் சிக்கி விட்டது. பண மாபியாக்கள் அனைரும், இந்த மாதம் இத்தனை ஆயிரம் கோடி சம்பாதிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, ஆபர் போட்டு கடன் தருகின்றனர். இப்படி தங்களிடம் கடன் வாங்குபவர்களை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்தே கொன்று விடுகின்றனர்.
பல கோடி தமிழக ஆண்கள் டாஸ்மாக் போதையில் இருந்து மீளவில்லை. அந்த குடும்பத்து பெண்கள் எல்லாம், ஆண்கள் வருவாய் இல்லாமல், பல்வேறு வாழ்வியல் நிர்பந்தங்கள் காரணமாக உள்ளூர் ரவுடிகளிடமோ அல்லது, பண மாபியாக்களிடமோ கடன் வாங்கி சிக்கி சீரழிந்து வருகின்றனர். வாழ்க்கை பாதுகாப்பிற்காக மகளிர் குழு அமைத்தவர்களில் 98 சதவீதம் பேர், கடன் மாபியாக்களிடம் சிக்கி கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இவர்கள் போலீசில் புகார் கொடுத்தால், இது வரவு செலவு விவகாரம், சிவில் வழக்குகளில் நாங்கள் தலையிட முடியாது என போலீசார் தட்டிக்கழித்து விடுகின்றனர். அல்லது பண மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களும் கடனில் சிக்கியவரை பிழிந்து எடுத்து விடுகின்றனர்.
இப்படி ஒரு அவல நிலையில் தமிழகத்தில் பல கோடிப்பேர் சிக்கி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள். இவர்களை பாதுகாக்கவே நேற்று முன்தினம் தமிழக சட்டபையில் தமிழக அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா கடன் வலைக்குள் சிக்கியவர்களை பாதுகாக்க பல அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
இந்த மசோதா மட்டும் சட்டமானால், நிச்சயம் தமிழகத்தில் பல கோடி பெண்கள் மறுவாழ்வும், புதுவாழ்வும் பெறுவார்கள். இவர்கள் தங்களை காப்பாற்றிய தமிழக அரசுக்கு தானே ஓட்டளிப்பார்கள். இதனால் தான் ஓட்டுக்களை குவிக்கப்போகிறது தி.மு.க., அரசு என கட்டுரையில் குறிப்பிட்டோம்.
இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டங்கள்
மற்றபடி இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. நிச்சயம் மக்களின் வாழ்வியல் சூழல் புரிந்து தமிழக அரசு அவர்களுக்கு பயன்படும் திட்டங்களை கொண்டு வருகிறது என்பது மட்டும் நிச்சயம். மற்றபடி ஊழல் புகார்கள், கட்டுப்பாடற்ற போதைப்பொருள் நடமாட்டம், அதிகரித்துள்ள ரவுடியிசம், அரசுத்துறை நிர்வாகத்தில் நடக்கும் வரம்பற்ற லஞ்சம், ஊழல், மத்திய அரசுடனான தேவையற்ற மோதல்கள் என பல விமர்சனங்கள் தி.மு.க., அரசு மீது இருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களில் தி.மு.க., அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியான பல திட்டங்களை கொடுத்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
-மா.பாண்டியராஜ்