தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கனிம வளக் கொள்ளை புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாகப் கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்துள்ளனர்.
ஒரே வாரத்தில் அதிகரித்த மணல் கொள்ளை
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கடந்த ஒரே வாரத்தில் மணல் கொள்ளை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டா நிலங்களில், சவுடு மண் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி, விதிகளை மீறி ஆற்று மணல் பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் துணையோடு முறைகேடா?
இந்த சட்டவிரோத மணல் கடத்தலுக்குக் கடலூர் கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் துணையாக இருப்பதாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தரப்பில் பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தரப்பு புகார்:
“இப்பகுதியில் நான்கு குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை ஆசையாகப் பயன்படுத்தி, நாள் ஒன்றுக்குச் சுமார் ஆயிரம் லோடு வரை மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு கடத்தப்படுகிறது.”
அதிர்ச்சியில் விவசாயிகள்
த.வெ.க. அரசு பொறுப்பேற்று பத்தே நாட்களேயான நிலையில், அதற்குள் இவ்வளவு பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடப்பது தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆற்றுப் படுகைகளில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



