திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வணிக வளாகம் கட்டுவதற்கு பதிலாக பக்தர்கள் வசதிக்காக கியூ காம்ப்ளக்ஸ் கட்ட உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், கியூ காம்ப்ளக்ஸ் குறித்த தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, அக்டோபர் 16க்கு வழக்கை ஒத்திவைத்தது.



