இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர இதுவே சரியான தருணம் என உணர்வதாக தெரிவித்த ரஹானே, ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு இருப்பது இயல்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் தோம்பிவிலியில் ஒரு சிறுவனாக கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிய தனக்கு, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருந்ததாக அவர் கூறினார். இந்திய அணியின் தொப்பியை அணிந்து நாட்டிற்காக விளையாடிய ஒவ்வொரு தருணமும் பெருமைக்குரியது என்றும், விளையாட்டை முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அணுகியதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமை கொள்வதாகவும் கூறிய அவர், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தாலும், கிரிக்கெட்டுடனான தனது தொடர்பு தொடரும் என்றும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தனது பயணத்தில் உறுதுணையாக இருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல், தனது மனைவி ராதிகா, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாத அவர், தேசிய அணிக்கு தேர்வாகாத நிலையிலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2024–25 பருவம் வரை மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.



