‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், தற்போது ‘வாரண்ட்’ என்ற புதிய வெப் தொடரின் மூலம் நடிகராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 22-ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த தொடரில் பிரசாந்த் பாண்டியராஜுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், கவுசல்யா, காளி வெங்கட், நம்ரிதா, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அன்றாட போலீஸ் வழக்குகளின் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களையும், சாதாரணமாக தோன்றும் வழக்குகள் எவ்வாறு தீவிரமான மற்றும் ஆபத்தான நிலைக்கு மாறுகின்றன என்பதையும் மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. ‘கோட்டை கருப்புசாமி’ என்ற காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், “கோட்டை கருப்புசாமி என்பது வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் அல்ல. அவர் சிரமமானவர், மனிதத் தன்மை நிறைந்தவர். அந்த கதாபாத்திரத்தின் நேர்மையே என்னை ஈர்த்தது. ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் வெளிப்படையான காட்சிகளை விட உண்மைத்தன்மையை விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் கேமராவின் பின்னால் மட்டும் ஆராய்ந்த உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது” என்றார்.



