சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பொன்முடி தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்திருந்த தனிநபர் புகார் மனுவில், மதரீதியான வெறுப்புணர்வை தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்திர பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



