திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடிக் கிருத்திகை திருவிழா கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆடி அஸ்வினி விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று ஆடி பரணி விழா நடைபெற்ற நிலையில், இன்று முக்கிய நிகழ்வான ஆடிக் கிருத்திகை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், சுவாமிக்கு தங்கக் கவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தந்து வழிபட்டனர்.
நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளத்தில் புனித நீராடி, பால், பன்னீர், மலர், மயில், அலகு உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்து “அரோகரா” முழக்கத்துடன் மலையேறி முருகப்பெருமானை தரிசித்தனர்.
ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்று நாள் தெப்பத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது. மலைக்கோயில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதிகளில் உலா வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருவிழாவையொட்டி திருத்தணி நகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் 3 மின்சார ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்ததால், ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.



