தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க மறுத்துள்ளன.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கூறுகையில், “தொகுதி மறுவரையறை தொடர்பாக அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் இல்லாத நிலையில் அவசரமாக கூட்டம் நடத்துவது, காவிரி பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் நாடகமே. எனவே திமுக இதில் பங்கேற்காது” என்று தெரிவித்தார்.
அதேபோல், அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறை தொடர்பாக புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. காவிரி – மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு புறக்கணித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை நீடிக்கும் நிலையில், இந்தக் கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. இதில் அதிமுக பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் பாமகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
20 எம்.பி.க்கள் பங்கேற்பு; 37 பேர் புறக்கணிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 57 பேர் உள்ளனர். இதில் திமுக (30), அதிமுக (4), பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 37 எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
அதேநேரத்தில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி.க்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா 2 எம்.பி.க்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.பி. என மொத்தம் 20 எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.



