தமிழக சட்டப்பேரவையில் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பாக எழுந்த விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “எனக்கு மொழிப் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டதும் உண்மைதான். எனக்கும் தாய்மொழி தமிழ்தான்” என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அவரது தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகள் குறித்து கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் எழுப்பிய கருத்தைத் தொடர்ந்து, நிதியமைச்சருக்கும் அவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த மரிய வில்சன், “முந்தைய நிதியமைச்சர் பிடிஆரையும், என்னையும் ஒப்பிட்டு பேசினர். மொழி எனக்கு ஒரு பிரச்சினைதான் என்பதை நான் மறுக்கவில்லை. நான் பிறந்தது புதுச்சேரி, வளர்ந்தது திருவாரூர், படித்தது சென்னை. தற்போது என்னை தத்தெடுத்தது ஆர்.கே.நகர். இந்த நான்கு இடங்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது” என்றார்.
மேலும், “சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் எங்களுக்கு ஒரு தகவலாகவே உள்ளது. இது எங்களுக்கு முதல் அனுபவம். சில விஷயங்களை நிச்சயமாக திருத்திக் கொள்வோம். உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிதியமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, கடந்த திமுக ஆட்சியில் அரசுத் துறைகளின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, மூன்று துறைகளின் வரவு-செலவு தொடர்பான விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் மேசையில் உள்ளன. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சங்கள் முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம். அந்த அறிக்கையை முதல்வர் உரிய நேரத்தில் வெளியிடுவார்” என்று கூறினார்.



