சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் (56), நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவரது உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஏ.தர்மராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



