குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகே, தமிழக அரசு சார்பில், நேற்று குடியரசு தின விழா நடை பெற்றது. காலை. 8:00 மணிக்கு, கவர்னர் ரவி தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முப்படைகள், தமிழக போலீசார், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அணிவகுப்பு மற்றும் அரசு துறை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், தமிழக கலைஞர்கள் மற்றும் வெளி மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.



