ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் இன்று போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
கராச்சியில் வன்முறை: 8 பேர் உயிரிழப்பு
கமேனியின் மரணம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 1) கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தை நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஆவேசமடைந்த இளைஞர்கள் தூதரகத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில், 8 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தகவலை கராச்சி காவல் அதிகாரி முகமது ஜவாத் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தீக்கிரையாக்குவோம்; எங்கள் தலைவரின் மரணத்திற்குப் பழி தீர்ப்போம்,” என்று போராட்டக்காரர்கள் முழக்கமிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தான் முழுவதும் பதற்றம்
வன்முறையைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லாகூர் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தியாவின் நிலை என்ன?
ஈரான் தலைவரின் மறைவு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது:
டெல்லி: தலைநகரில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
காஷ்மீர்: பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கமேனிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க தூதரகப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



