ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான நிதி மேலாண்மை காரணமாக வருவாய் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநில அரசு ரூ.3,586 கோடி அளவிற்கு குறைத்து அறிவித்துள்ளது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மொத்த ஒதுக்கீடு ரூ.54,928 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.
நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தின் ஒரு பகுதி ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் தனது சம்பளத்தின் 50 சதவீதத்தை ஒத்திவைத்துள்ளதாகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சம்பளத்திலும் சதவீத அடிப்படையில் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியிற்கு மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை உதவி (RDG) நிறுத்தப்பட்டதே முக்கிய காரணம் என மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் மறுத்து, மோசமான நிதி மேலாண்மையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தின் நிதிநிலை குறித்து அரசியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.



