மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையை பாதித்துள்ள நிலையில், இந்தியா முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளன.
மேற்கு ஆசியப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க இந்தியா பல்வேறு நாடுகளை அணுகி வருகிறது. அந்த வகையில், ஈரானிலிருந்தும் மீண்டும் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்காவின் தடைகள் காரணமாக 2019 மே மாதத்திலிருந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கிழக்கு பதற்ற சூழ்நிலையிலும், இந்திய நிறுவனங்கள் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. மேலும், ஈரானுக்கு பணம் செலுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. இதனால் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவைகள் பாதுகாப்பாக உள்ளன” என்று தெரிவித்துள்ளது.
மேலும், பணம் செலுத்தும் பிரச்சினையால் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சீனாவுக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியாகிய தகவல்களையும் மத்திய அரசு மறுத்துள்ளது.
2018-ஆம் ஆண்டு அமெரிக்கா கடுமையான தடைகளை விதிப்பதற்கு முன்பு, ஈரான் இந்தியாவின் முக்கிய எண்ணெய் விநியோக நாடாக இருந்தது. ஈரான் லைட் மற்றும் ஈரான் ஹெவி வகை கச்சா எண்ணெய்கள் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்தது. அப்போது, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 11.5% ஈரானிலிருந்தே வந்தது.
பின்னர் அமெரிக்க தடைகள் காரணமாக, இந்த வர்த்தகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது மத்திய கிழக்கு போர் சூழ்நிலையை முன்னிட்டு அமெரிக்கா சில தளர்வுகளை அறிவித்துள்ளதால், மீண்டும் இந்தியா ஈரானை அணுகியுள்ளது.



