தமிழக முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாளையூத்து ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு பேசிய போது கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். விடுபட்ட தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லம் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
தாளையூத்து ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தவர்களுக்கு 6 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 3 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் மற்றும் 2 நபர்களுக்கு ரூ.1.5 லட்சம் ஆகிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, தொப்பம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



