திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தோல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்று. உளுந்தூர்பேட்டை அருகே சாரதா ஆசிரமம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்டியரிங் லாக் ஆனது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி, எதிர் திசை சாலையில் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த நேரத்தில், சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த மூன்று சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஈச்சர் லாரி மீது மோதின. இதனால் ஈச்சர் லாரி மற்றும் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தொடர் விபத்தால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் மாற்று பாதைகளில் வாகனங்களை திருப்பி அனுப்பி, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



