தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வுத்தாள்கள் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்பட்டன.
இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.20 சதவீத தேர்ச்சி விகிதமாகும்.
இதில் 4,06,167 மாணவிகள் 97 சதவீத தேர்ச்சியுடன் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,527 பேர் தேர்ச்சி பெற்று 93.19 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.
இந்தாண்டு தேர்வில் பங்கேற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536 ஆகும். இதில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அவற்றில் 489 அரசு பள்ளிகளும் அடங்கும்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
அடுத்து நெல்லை மாவட்டம் 97.54 சதவீதமும், திருச்சி மாவட்டம் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப் படிவத்தில் வழங்கிய செல்போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்கள் விண்ணப்பத்தின் போது பதிவு செய்த எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் சேவையிலும் தேர்வு முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 78452 52525 என்ற எண்ணுக்கு ‘Hi’ என வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, தேவையான விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பெறலாம்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



