தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதால், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற தவெக நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையான 118 இடங்களை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் நாடிய நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். அந்த ஆதரவுக் கடிதங்களுடன் விஜய் அன்றே ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்தார். அப்போது சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை அவர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையின் போது, “ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது” என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள ஆதரவை பெற விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் ஆதரவை கோருவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆளுநரின் நிலைப்பாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியுமா என்பது குறித்தும், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரும் பணியில் இறங்கினர்.
சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். அவர்கள் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்கள். எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்” என்றார்.
அதேபோல், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது காதர் மொகிதீன், “நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் முடிவே எங்களின் நிலைப்பாடு. ஸ்டாலின் கூறினால் ஆதரவு வழங்குவோம்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் தவெக முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலம் பேசியதாகவும், அவரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



