கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் இரவில் அந்தோணி ஆரோக்கிய ஜோ, வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள மாதா கோயில் வளாகத்தில் அந்தோணி ஆரோக்கிய ஜோ உடலில் ரத்த காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்தோணி ஆரோக்கிய ஜோ உடன் திங்கட்கிழமை இரவு சென்ற இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுக்குள் திடீரென ஏற்பட்ட தகராறில் அந்தோணி ஆரோக்கிய ஜோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



