கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய சுடுமண்உறைகிணறுபுதையுண்டு இருப்பதை பொதுமக்கள் கண்டறிந்தனர்.
உறை கிணறுகள் இரண்டு வகை உள்ளன. ஒன்று அடுக்கு வகை. மற்றொன்று சொருகு வகை உறை கிணறு.கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த உறை கிணறு அடுக்கு வகையை சேர்ந்ததாகும்.
குடிநீர் தேவைக்காகவும், வீட்டின் பயன்பாட்டுக்காகவும் உறை கிணறுகள் தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மை காலம் வரை இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆற்றுப்படுகையிலும் இதுபோன்ற உறை கிணறுகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான உறை கிணறுகள் ஏரி, குளம், ஆறு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
வறட்சி காலங்களில் தண்ணீர் வற்றும் போது இந்த உறை கிணறுகள் அக்காலத்து மக்களுக்கு தண்ணீர் தேவையை பெரிதும் நிவர்த்தி செய்தன.
இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகார். அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், பேரங்கியூர், செஞ்சி. திருவாமாத்தூர் போன்ற பலஇடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.



