தக்கண்டராயபுரம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய வழி தடங்களில் பஸ் போக்குவரத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
2 புதிய வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்து தொடக்க விழா நேற்று தக்கண்டராயபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ெதள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் டி.ராதா, ப.இளங்கோவன், ஏ. சுந்தரேசன், மாவட்ட பிரதநிதி ரகுநாதன், ஒன்றிய பொருளாளர் பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய வழித்தடத்தில் வந்தவாசி திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணி மனைக்கு சொந்தமான பேருந்து தக்கண்டராயபுரம் கிராமத்தில் காலை 7-30 மணிக்கு புறப்பட்டு மேல்பாதி, வடவணக்கம்பாடி, ஆராசூர், மாம்பட்டு வந்தவாசி புதிய பஸ் நிலையம், உத்திரமேரூர், சிங்கபெருமாள்கோயில், கூடுவாஞ்சேரி வழியாக சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு காலை 10 மணிக்கு செல்லும்.
அதே பேருந்து வந்தவாசி வந்து பின்னர், மாலை 5-30 மணிக்கு தக்கண்டராயபுரத்தில் இருந்து இதே மார்க்கமாக செல்லும். மேலும் டபள்யு 1 நகர பேருந்து பிற்பகல் 2.15 மணிக்கு வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் புறப்பட்டு கீழ்கொவளைவேடு, எறும்பூர், தக்கண்டராயபுரம் 2-45 வந்து பின்னர் 10 நிமிடத்தில் மேல்பாதி, வடவணக்கம்பாடி, கீழ்நத்தியம்பாடி கூட்டுசாலை, ஆராசூர், மாம்பட்டு, இந்திராநகர் புதிய பஸ் நிலையம் வழியாக பழைய பஸ் நிலையம் செல்லும்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பவானி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவர் பிள்ளையார், முன்னாள் தலைவர் முனியன், மனோஜ் கிளை மேலாளர்கள் விநாயகம், ராமச்சந்திரன் தொமுச நிர்வாகிகள் வெங்கடேசன், முருகன், தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.