திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 03.12.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து பணிகளுக்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கிரிவலப் பாதையில் பக்தர்களு க்கு நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர்,கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்த போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம் பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.மணி, மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) சந்தோஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



