செய்யாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் இணைப்பு பகுதி திடீரென உள்வாங்கிக் கொண்டதால், வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, போளூர் ஆரணி, செய்யாறு வழியாக ஓடி, காஞ்சிபுரம் மாவட்டமான திருமுக்கூடலில் பாலாறு, வேகவதி ஆகிய ஆறுகளுடன் ‘சங்கமிக்கிறது’ செய்யாறு நகரின் தெற்கு பகுதியை ஒட்டி இந்த ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு உயர் மட்ட மேம்பாலம், அப்போதைய முதல்வர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்டது.
வந்தவாசி, திண்டிவனம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு மற்றும் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் ‘இரு கரைகளையும்’ தொட்டபடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மேம்பாலத்தின் ‘மேற்கு பகுதியில் உள்ள இணைப்பு சாலைதிடீரென உள்வாங்கிக் கொண்டது. இதைப் பார்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சிலர், செய்யாறு நெடுஞ்சாலைத் துறைக்கு தகவலை கொடுத்தனர்.
செய்யாறு கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உள்வாங்கிக் கொண்ட செய்யாற்றில் மேம்பால இணைப்பு பகுதியை பார்வையிட்டனர். பின்பு சாரம் அமைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி இணைப்பு பகுதியை சீரமைக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.



