பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நகரின் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி மறுநாள் பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நடைபெறும்.
இதனை அடுத்து நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீப கொடியேற்று விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இதைத் தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் அதிகாலை 4:30 மணி அளவில் அண்ணாமலையார் கோவிலில் முன்பாக ஏற்றப்பட்டு பின்பு அன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் என்று அழைக்கக்கூடிய கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இந்த நிகழ்வை காண தமிழக மட்டுமல்ல அது வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய அடிப்படைகளுக்காக அண்ணாமலையார் ராஜகோபுரம் முன்பாக பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிகாலையில் பரணி தீபம் மற்றும் மாலை 6 மணி அளவில் மகா தீபம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



