திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி தாசநாயக்கன்பட்டி, வைரபெருமாள்பிள்ளையூர், மணல் காட்டூர் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராம மக்கள் மணல் காட்டூர் கிராமத்தில் வரட்டாற்றில் உள்ள தரைப்பாலத்தின் வழியாக நடந்து கோவிலூர் வந்து அங்கிருந்து திண்டுக்கல், வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வார்கள்.
மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் தரைப் பாலத்தை மூழ்கி செல்லும்போது பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேறாமல் ஊருக்குள்ளயே தங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சேதம் அடைந்த தரைப்பாளத்துக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் குஜிலியம்பாறை இ.காங்கிரஸ் கட்சி வட்டார தலைவரும், சமூக ஆர்வலருமான வீ.தர்மர் மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, கற்பகம், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தேவி, ஆர்.கோம்பை ஊராட்சி செயலர் பெருமாள் ஆகியோர் சேதமடைந்துள்ள தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்டுவதற்காக அளவீடு செய்து திட்ட மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு செய்தனர் அப்போது காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் வீ.தர்மர் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.



