கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார்.
இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த 8-ந் தேதி சனிக்கிழமை அன்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனான். நீண்ட நேரம் ஆகியும் குழந்தை வீட்டிற்கு வராததால் அக்கம் பக்கத்தில் உள்ள பல்வேறு கிணறு, குட்டை, மற்றும் நீர் நிலைகளில் தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குழந்தை கிடைக்காததாலும் காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காததாலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடிய போது ஒரு கிணற்றில் தருண் சடலமாக மிதந்தது தெரியவந்தது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



