ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ராம்பன் மாவட்டத்தில் பேட்டரி சாஷ்மா என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த ராணுவ வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாகனம் கவிழ்ந்த பள்ளத்தாக்கில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இறந்தவர்களின் உடல்கள் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாகன விபத்தில் வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.