தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வைஷ்ணவியை பாஜகவுக்கு வரவேற்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். மாவட்டச் செயலாளர் நியமனம், மாநாடு, பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்த நகர்வுகளை தவெக நடத்திவருகிறது.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. அப்போது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி எனும் தவெக தொண்டருக்கு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதனால், செய்திகளில் அவர் இடம் பெற்று கவனம் பெற துவங்கினார்.
இந்தநிலையில், தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் மனதை கல்லாக்கிக்கொண்டு, இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றே தான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடங்கினேன்.
ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த ”மூன்று மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்”. என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து, கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்து தனது விலகலை அவர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த வைஷ்ணவி, “இளம் பெண்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் தான் வருகிறோம். ஆனால் தற்பொழுது அவர்களை இழக்கின்ற ஒரு சூழலை மாவட்ட நிர்வாகிகள் ஏற்படுத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பெண்கள் தங்கள் வாழ்க்கையை அரசியலுக்கு அர்ப்பணிக்க நினைக்கும்போது, தங்கள் குடும்பத்தில் இருந்தோ, சமூதாயத்தில் இருந்தோ அவர்களுக்கு சுலபமாக ஆதரவு வராது.
ஆனால் இதனை எல்லாம் தாண்டி அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடியது எனும் உறுதி இருந்தால், எத்தகைய தடையையும் நம்மால் தாண்ட முடியும். எனவே சகோதரி உண்மையாக மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம்” எனத் தெரிவித்தார்.