புதுக்கோட்டை மாநகர தி.மு.க., செயலாளராக இருந்தவர் செந்தில். அமைச்சர் நேருவின் ஆதரவாளரான இவர், தீவிர உழைப்பாளி. கட்சிப்பணிகளில் மிக சிறப்பாக செயல்பட்டவர். கட்சிக்காக உழைத்து, அத்தனை பேரிடமும் நல்ல பெயர் வாங்கியவர். அனைவருக்கும் உதவும் மனப்பக்குவம் கொண்டவர். இப்படி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வந்த இவர், திடீரென இறந்து விட்டார்.
அதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அமைச்சர் நேரு, மறைந்த மாநகர செயலாளர் செந்திலின் மகன் கணேஷை மாநகர செயலாளராக ஆக்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை எம்.பி., அப்துல்லா தனது மேலிட தொடர்புகளை வைத்து, அதாவது அமைச்சர் அன்பில்மகேஷ் மூலம் துணை முதல்வரை தொடர்பு கொண்டு, தனது ஆதரவாளர் ராஜேஷை மாநக பொறுப்பாளராக நியமித்து விட்டார்.
அப்துல்லாவை பொறுத்தவரை எம்.பி.,யாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் தெரியாதவர். உள்ளூர் அரசியல் மட்டுமல்ல.. உள்ளூர் தி.மு.க., அரசியல்வாதிகளைக் கூட இவருக்கு தெரியாது. தெரிந்தவர்களிடமும் கெட்ட பெயரை தான் சம்பாதித்துள்ளார். உள்ளூரில் எந்த ஆதரவும் இல்லாமல், மேலிட தொடர்புகளை வைத்து மட்டும் அரசியல் செய்து வந்த இவர், மாவட்ட அரசியலில் தலையிட்டதன் மூலம் குழப்பம் அதிகமானது.
அதேபோல் ராஜேஷூம் உள்ளூர் அரசியலில் எந்த செல்வாக்கும் இல்லாதவர். கட்சிக்கும் புதுவரவு. இதனால் கட்சியினர் இவரை ஏற்கவில்லை. இருப்பினும் ராஜேஷ் தன்னை சுற்றி நான்கு பேரை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றார். தானாகவே, சுயமாக கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் கட்சியினரே கலந்துகொள்வதில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உள்ளூர் தி.மு.க., அரசியல் பிரமுகர்கள் புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக ராஜேஷ் நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அவரை மாற்ற வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும், பிரச்னைகள் செய்தனர்.
ராஜேஷ்க்கு எதிராக அமைச்சர் ரகுபதியும், கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வப்பாண்டியனும் செயல்பட்டனர். ராஜேஷ் அதிருப்தியாளர்கள் முதல்வரை சந்திக்க இவர்களே ஏற்பாடும் செய்து கொடுத்தனர். முதல்வரை சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட, மாநகர தி.மு.க., அரசியல் பிரமுகர்கள் தெள்ளத்தெளிவாக கட்சி நிலவரம் குறித்து விளக்கினர்.
அப்துல்லாவும், ராஜேஷூம் மேலிட செல்வாக்கு மூலம் மட்டுமே கட்சிப் பதவிக்கு வந்து உள்ளனர். இவர்களுக்கு கட்சியில் உள்ளூர் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சிறிய அளவில் கூட ஆதரவு இல்லை என்ற உள்ளூர் அரசியல் கள நிலவரத்தை புரிந்து கொண்ட முதல்வர், தற்போது ஒரு தெளிவான முடிவிற்கு வந்துள்ளார்.
புதுக்கோட்டை மாநகரத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து ஒன்றின் செயலாளராக மறைந்த செயலாளர் செந்திலின் மகன் கணேஷையும், மற்றொரு பகுதியின் செயலாளராக வேறு ஒருவரையும் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார். அந்த மற்றொருவர் துணை மேயர் லியாகத் அலியாக இருக்க வேண்டும் என அமைச்சர் ரகுபதியும், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியனும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர் நயினார் முகமது என்பவரை மாநகர செயலாளராக நியமிக்க காய் நகர்த்தி வருகின்றனர். ஆக புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் எம்.பி., அப்துல்லாவும், அவரது ஆதரவாளர் ராஜேஷ்சும் மீண்டும் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். எது எப்படியோ, புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் அமைச்சர் கே.என்.நேருவின் கையே ஓங்கி உள்ளது. அப்துல்லா வீழ்த்தப்பட்டு விட்டார் என தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
மா.பாண்டியராஜ்