டிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு , விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
நேற்று தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி, 1998ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனைகளை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது:-
தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் இந்தியா உலகின் முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது.மே 11, 1998 அன்று இந்தியா ஆபரேஷன் சக்தியின் கீழ் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹன்சா-3 விமானத்தின் முதல் விமானத்தைக் கண்ட முக்கியமான நிகழ்வுகளை தேசிய தொழில்நுட்ப தினமான இன்று (நேற்று)நினைவு கொள்கிறது.
இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மே 11ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார். ‘தேசிய தொழில்நுட்ப தினத்தில் வாழ்த்துகள்! இது நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை, அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில், 1998ம் ஆண்டு பொக்ரான் சோதனைகளை நினைவுகூறும் ஒரு நாள்.
அவை நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தன்னம்பிக்கைக்கான நமது தேடலில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தன,’இந்தியா, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பம் மற்றும் பல தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் முன்னோடியாக வளர்ந்து வருகிறது,
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு. ‘தொழில்நுட்பம் மனிதகுலத்தை உயர்த்தவும், நமது நாட்டைப் பாதுகாக்கவும், எதிர்கால வளர்ச்சியை துாண்டி விடுவது அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.