100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்து 2021 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அதில், பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் சொத்து தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிலத்திற்கு சொந்தமானவர்கள் தங்களிடமிருந்து நிலத்தை அபகரித்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், இந்த வழக்கின் தீவிர தன்மையை கருதி சிபிசிஐடி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் பெற முடியாத காரணத்தினால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதனையடுத்து, 13 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி அதிகாரிகளால் கேரளாவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அடுத்த மாதமே அவரது சகோதரர் சேகரும் கைது செய்யப்பட்டார்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமான வரி புலனாய்வு பிரிவில் இருக்கும் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த நிலமானது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பினாமி சொத்து இல்லை எனவும், பினாமி பரிவர்த்தனை மூலமாக வாங்கப்பட்டது இல்லை எனவும் நிரூபிக்குமாறு கூறி வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் மற்றும், அந்த நிலம் தொடர்பான உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே மே 9ம் தேதி ஆஜராகும் படி தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே 23ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞரோ அல்லது அது தொடர்பான பொறுப்புடைய நபர்களையோ வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராகும் படி வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.